கணினியுடன், அதற்கு இணையான பல்வேறு சாதனங்களை இன்று பயன்படுத்துகின்றனர். செல்பேசி (ஸ்மார்ட்ஃபோன்), கைக்கணினி (டேப்ளட் பிசி) போன்றவற்றை குறிப்பாகச் சொல்லலாம். இவை அனைத்தும் எப்போதும் ஒருங்கிணைந்தே இருக்கின்றன. எனவே எப்போது வேண்டுமானாலும் ஒருவர் தம்முடைய தனிப்பட்ட தகவல்களை அணுகலாம் என்ற நிலை வந்துவிட்டது. ஒளிப்படம், திரைப்படம், ஆவணங்கள், மின்னஞ்சல், தொடர்புகள் என எந்த வகையான தகவலையும் உடனடியாக யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். இவற்றை எல்லாம் விட்டு விட்டால் கூட இணையத்தில் உள்ள தகவல்களை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அணுகிப் பெறலாம் அல்லவா? அதாவது கிளவ்டு கம்ப்யூட்டிங்கின் பயன்களை பரவலாக ஏற்கெனவே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.
கிளவ்டு கம்ப்யூட்டிங் (Cloud computing) என்பது ஒரு தொழில்நுட்பம். தகவல்களையும், மென்பொருள்களையும் சேமிப்பதற்கு இணையத்தையும், மைய சர்வர் கணினிகளையும் பயன்படுத்தும் தொழில்நுட்பம் இது. தனியாட்களும், நிறுவனங்களும், இந்த தகவல்களையும், மென்பொருள்களையும் பயன்படுத்தலாம். இங்கு குறிப்பாக கவனிக்க வேண்டிய விசயம், அப்ளிகேசன்களை கணினிகளில் நிறுவாமலே, ஒரு பொதுவெளியில் வைத்து பயன்படுத்தலாம் என்பதே!
இந்த தொழில்நுட்பமானது, சேமிப்பகம், நினைவகம், செயல்படுத்துதல், பேண்ட்விட்த் என அனைத்தையும் நடுநாயகமாக அமைப்பதன் மூலம் (centralizing storage, memory, processing and bandwidth), பயனாளர்கள் (தனியாட்களும், நிறுவனங்களும்) மிகக் குறைந்த திறனில் கணிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள உதவுகிறது. கிளவ்டு கம்ப்யூட்டிங்கிற்கு எளிய எடுத்துக்காட்டாக, ஜிமெயில், யாகூ போன்ற மின்னஞ்சல் சேவைகளை சொல்லலாம். இவற்றைப் பயன்படுத்துவதற்கு மென்பொருளோ, சர்வரோ தேவையில்லை. பயனாளரிடம் இணைய இணைப்பு இருந்தால் போதுமானது. மின்னஞ்சல்களை அனுப்பலாம், பெறலாம். சர்வரும், மின்னஞ்சல் நிர்வாக மென்பொருளும் கிளவ்டில் அதாவது இணையம் என்ற பொது வெளியில் இருக்கின்றன. கிளவ்டு சேவையை வழங்கும் யாகூ, ஜிமெயில் நிறுவனங்களால் இவை பராமரிக்கப்படுகின்றன. அவற்றின் பயனை மட்டும் பயனாளர் துய்க்கிறார். இதை விளக்க வல்லுநர்கள் ஒரு எளிய உவமையை காட்டுகின்றனர்: பால் தேவை என்றால் மாடு வாங்க வேண்டுமா? பயனாளர்களுக்குத் தேவை மென்பொருள் அல்லது வன்பொருளின் மூலம் கிடைக்கும் பயன். எனவே அந்த பயனை (பால்) மட்டு்ம் பெறலாம். ஏன் மென்பொருள்\வன்பொருளை (மாடு) வாங்க வேண்டும்.
ஒரு நிறுவனச் சூழலை எடுத்துக் கொள்வோம். ஊழியர்கள் தங்கள் பணிகளைச் செய்வதற்குத் தேவையான வன்பொருள்\மென்பொருள்களை வழங்க வேண்டும். அதாவது அனைவருக்கும் கணினி வாங்கினால் போதாது. மென்பொருள் அல்லது மென்பொருள் உரிமங்களை வாங்க வேண்டும். புதிதாக ஊழியர்களை சேர்க்கும்போது அவர்களுக்கும் கூடுதலாக மென்பொருள்களை வாங்க வேண்டும்.
ஒவ்வொரு கணினியிலும் மென்பொருள் தொகுப்பை நிறுவுவதற்குப் பதிலாக இணையத்தின் வழி வழங்கப்படும் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவையை வழங்கும் நிறுவனம் தனது சர்வர் கணினியில் மென்பொருள்கள் அனைத்தையும் வைத்திருக்கும். பல நிறுவனங்களுக்கு இந்த சேவையை வழங்கும். இதுதான் கிளவ்டு கம்ப்யூட்டிங் என்று அழைக்கப்படுகிறது. இது கணினித்துறையி்ல் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
கணினிகளைப் பொறுத்தவரை, அப்ளிகேஷன்களை இயக்குதல் என்ற வகையில் கணிசமான பணிப்பளு குறைந்துள்ளது. கிளவ்டு எனப்படும் மின்வெளியை உருவாக்கும் நெட்ஒர்க் அந்த வேலையை பார்த்துக் கொள்ளும். பயனாளர்கள் நிலையில் மென்பொருள்களுக்கு மட்டுமின்றி, வன்பொருள்களுக்கான தேவையும் குறைகிறது. பயனாளர் கணினியில் பிரவுசர் அளவுக்கு எளிமையான ஒரு இடைமுகப்பு மென்பொருளை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.
கட்டமைப்பு (Cloud Computing Architecture)
கிளவ்டு கம்ப்யூட்டிங் முறையை முன் புலம் (front end), பின் புலம் (back end) என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவை இரண்டும் ஒரு நெட்ஒர்க் வழியாக (பெரும்பாலும் இணையத்தின் வழியாக) இணைக்கப்படுகின்றன. முன் புலம் என்பது கணினி பயனாளர். பின் புலம் என்பதுதான் கிளவ்டு பகுதி. முன்புலம் என்பது பயனாளரின் கணினி (அல்லது நெட்ஒர்க்), கிளவ்டு கம்ப்யூட்டிங் முறையை அணுகுவதற்கான அப்ளிகேஷன் ஆகியவற்றை உள்ளடக்கியது. அனைத்து கிளவ்டு கம்ப்யூட்டிங் முறைகளும் ஒரே மாதிரியான பயனர் இடைமுகப்பை பயன்படுத்துவதில்லை. மின்னஞ்சல் சேவையை எடுத்துக் கொண்டால் அதற்கு பிரவுசரே (பயனர் இடைமுகப்பு) போதுமானது. இதுபோல் கிளவ்டு கம்ப்யூட்டிங் முறையும் அதற்கென ஒரு இடைமுகப்பை பயன்படுத்துகிறது. பின்புலத்தில் பலவேறு கணினிகள், சர்வர்கள் (servers), தகவல் சேமிப்பு முறைகள் (data storage systems) ஆகியவை சேர்ந்து கணிப்பீட்டுச் சேவைகளின் தொகுதியை (cloud of computing services) உருவாக்குகின்றன. கிளவ்டு கம்ப்யூட்டிங் முறை என்பது டேட்டா பிராசசிங்கில் இருந்து வீடியோ கேம்ஸ் வரை எந்தவொரு கணினி புரோகிராமையும் உள்ளடக்கியதாக இருக்கலாம். ஒவ்வொரு வகையான அப்ளிகேசனுக்கும் அதற்கென ஒதுக்கப்பட்ட தனி சர்வர் தேவை.
ஒரு மைய சர்வர் ஒட்டுமொத்த முறையையும் நிர்வகித்து, தகவல் போக்குவரத்தை கண்காணித்து செயல்பாடுகள் சீராக நடைபெறுவதை உறுதிசெய்யும். இது விதிமுறைகளின் தொகுப்பான நெறிமுறைகளை பின்பற்றுவதுடன், மிடில்வேர் எனப்படும் சிறப்பு வகை மென்பொருளை பயன்படுத்தும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, கிளவ்டு கம்ப்யூட்டிங் சேவை வழங்கும் நிறுவனம் சேமிப்பகங்களையும் பராமரிக்கும்.
பயன்பாடுகள்
கிளவ்டு கம்ப்யூட்டிங்கின் பயன்களுக்கு வரம்பு ஏதும் இல்லை. உரிய மிடில்வேர் இருந்தால் அனைத்து வகையான மென்பொருள் பணிகளையும் நிறைவேற்றும்.
புரோகிராம்களை இயக்கவும், டேட்டாக்களை சேமிக்கவும் மற்றொருவரின் கம்ப்யூட்டர் முறைய ஏன் நாட வேண்டும்?
அப்ளிகேசன்களையும், டேட்டாவையும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அணுக விரும்பலாம். இணையத்துடன் இணைப்பு பெற்ற எந்த கணினியையும் பயன்படுத்தி கிளவ்டு கம்ப்யூட்டிங் அமைப்பை அணுகலாம்.
இம்முறை ஹார்டுவேர் செலவை குறைக்கிறது. கிளவ்டு கம்ப்யூட்டிங் முறையை பயன்படுத்தும்போது, பயனாளர்கள் நிலையில் மிகவும் மேம்பட்ட ஹார்டுவேர்கள் இருக்க வேண்டும் என்பதில்லை. விலை குறைந்த கம்ப்யூட்டர் டெர்மினல்களை வாங்கினால் போதுமானது. (கம்ப்யூட்டர் டெர்மினல் எனும்போது, மானிட்டர், கீபோர்டு, மவுஸ் போன்ற உள்ளீட்டுச் சாதனங்கள், கிளவ்டு முறையுடன் இணைபபு பெறுவதற்கும், மிடில்வேரை இயக்குவதற்குமான பிராசசிங் திறன் இருந்தால் போதும். பெரிய ஹார்டுடிரைவும் தேவையில்லை).
கணினிமயமாக்கப்பட்ட நிறுவனங்களைப் பொருத்தவரை நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள உரிய மென்பொருள்களை வாங்கியே தீர வேண்டும். இந்நிறுவனங்கள் கிளவ்டு கம்ப்யூட்டிங் முறையை பயன்படுத்தும்போது, அப்ளிகேசன்களை அங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு கணினிக்கும் மென்பொருள்களையோ மென்பொருள் உரிமங்களையோ வாங்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக கிளவ்டு கம்பயூட்டிங் நிறுவனத்திற்கு பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணம் வழங்கினால் போதும். சர்வர்கள் மற்றும் சேமிப்பகங்களை வைத்துப் பராமரிக்க இடம் தேவை. கிளவ்டு கம்ப்யூட்டிங் இந்த இடத் தேவையை நீக்குகிறது.
நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப செலவை குறைக்கவும் கிளவுட் கம்ப்யூட்டிங் உதவுகிறது. கம்ப்யூட்டர்களால் எழும் பிரச்சினைகள் குறைகின்றன.