Saturday, June 29, 2013

இணையம் இயங்காமல் நின்று போகாது!?!

 

 

பேருந்தை ஓட்டுவதற்கு அதன் பொறியமைப்பு, இயக்கம் பற்றி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், சில அடிப்படைக் கூறுகளைத் தெரிந்திருப்பது பல நேரங்களில் கைகொடுக்கும். இதேபோலத்தான் இணையமும். அதைப் பயன்படுத்த, எப்படி இயங்குகிறது என்ற விசயம் அவசியமில்லை என்றாலும், அடிப்படையான சில செயல்பாடுகளைத் தெரிந்துகொள்வது நல்லது. அந்த வகையில் இணையம் எப்படி அமைந்துள்ளது, வெப் பிரவுசிங் (இணைய உலா) எப்படி நடைபெறுகிறது, மின்னஞ்சலை ஒருவருக்கு அனுப்பும்போது என்ன நடைபெறுகிறது என்பன உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.

உலக அளவிற்கு பரவிய வலைப் பின்னல்

சுருக்கமாகச் சொன்னால், இணையம் என்பது ஒரு உலகளாவிய வலைப் பின்னல். இதில் உங்கள் கணினி, அண்டை வீட்டுக்காரரின் கணினி, கூகுள் நிறுவன கணினிகள் என அனைத்தும் அடக்கம். இணையத்தி்ன் வரலாறு 1960கள் என்ற காலகட்டத்திற்கு பின்னோக்கி செல்கிறது. இருப்பினும், தற்போது நாம் பயன்படுத்தும், ஒன்றுக்கொன்று தொடர்புடைய வலைப் பக்கங்களாக (web pages) அமைக்கும் முறை 20 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதாகும்.

ஹார்டுவேர் இணைப்புகள்

இணையத்தில் இணைந்துள்ள கோடிக் கணக்கான கணினிகள், முதன்மையாக கம்பிவடங்கள் (கேபிள்) மூலமே இணைக்கப்பட்டுள்ளன. வீடுகளை இணைக்கும் தொலைபேசி வயர்களில் தொடங்கி, மின்னல் வேகத்தில் தகவல்களை கடத்தும் ஃபைபர்-ஆப்டிக் கேபிள் வரை அனைத்து வகையான கம்பிவடங்களும் இதில் அடக்கம். இன்றைக்கு பிராட்பேண்ட் இணைப்பு பயன்படுத்துகிறோமே, அது ஏடிஎஸ்எல் (Asymmetric Digital Subscriber Line - ADSL) எனப்படுகிறது. அதாவது கணினியானது பிராட்பேண்ட் ரூட்டருடன் (broadband router) இணைக்கப்படுகிறது. பிராட்பேண்ட் இணைய இணைப்பு கொடுக்கும்போது, சிறிய கருப்பு நிற பெட்டி வைக்கப்படுகிறதே அதில் ADSL+ router என குறிப்பிடப்பட்டுள்ளதை பார்த்திருக்கலாம். இந்த பிராட்பேண்ட் ரூட்டரானது தொலைபேசியுடன், ஒரு சிறிய சாக்கெட் வழியாக இணைக்கப்படுகிறது.

அதிலிருந்து உள்ளூர் தொலைபேசி இணைப்பகத்திற்கு இணைக்கப்பட்டு, அங்கிருந்து இணைய இணைப்பு வழங்கும் நிறுவனத்தின் (internet service provider - ISP) சர்வர்களுடன் இணைக்கப்படுகிறது. இந்த சர்வர்கள் மூலமே இணையத்தின் எஞ்சிய பகுதிகளுடன் இணைப்பு கிடைக்கிறது. ஃபைபர்-ஆப்டிக் கேபி்ள்கள் கடல் கடந்து கண்டங்களை இணைக்கின்றன. இவை நொடிக்கு பல டிரில்லியன் கணக்கான தகவல்களை கடத்தும் திறன் கொண்டவை. இணைய தொடர்பு என்று வரும்போது செயற்கைக் கோள் இணைப்புகளும் முதன்மையான பங்கு வகிக்கின்றன.

பயனாளர்களைப் பொருத்தவரை வீட்டுக் கணினி அல்லது அலுவலகக் கணினிக்கு, இணைய தளங்களை வழங்குபவை சர்வர் கணினிகள் ஆகும். சர்வர்களை ஆற்றல்மிக்க கணினிகள் என்று கூறலாம். ஒரு இணைய தளத்திற்கு செல்லும்போது (சான்றாக www.google.com) என்ன நடக்கிறது என்றால், சர்வரானது தகவல்களை இணையத்தின் வழியாக பயனாளர் கணினிக்கு அனுப்பி வைக்கிறது.

சரி, கோடிக் கணக்கான இணைய பக்கங்கள் இருந்தாலும், பிரவுசரில் www.google.com என்று தட்டச்சு செய்யும்போது சரியாக அந்த இணைய தளம் எப்படி காட்டப்படுகிறது? இதற்கு விடைதான் ஐபி முகவரி (internet protocol address - IP address). இணையத்துடன் இணைப்பு பெற்றுள்ள ஒவ்வொரு கணினிக்கும் ஒரு ஐபி முகவரி உண்டு. இது தொலைபேசி எண்ணைப் போன்ற ஓர் எண்ணாகும். அதேநேரம் ஒவ்வொரு கணினிக்கும் எண்கள் வேறு என்பதால் கண்டுபிடிப்பது எளிது. சான்றாக  62.140.213.251 என்பது ஓர் ஐபி முகவரி. இதுபோன்ற எண்களை மனதில் வைத்துக் கொள்ள முடியாது என்பதால், இணைய தளங்கள் டிஎன்எஸ் எனப்படும் டொமைன் பெயர் முறையை (Domain Name System - DNS)  முறையை பயன்படுத்துகின்றன. அதாவது எண்கள் www.bbc.com என்பது போன்ற பெயர்களாக மாற்றப்படும் முறை இது. இருப்பினும் பெயர்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஐபி முகவரி தெரிந்தால் அதையும் தட்டச்சு செய்து, இணைய தளங்களை அணுகலாம். உங்கள் கணினியின் ஐபி முகவரியைத் தெரி்ந்து கொள்ள வேண்டுமானால்,  www.whatismyipaddress.com எனற தளத்திற்கு செல்லலாம். இதேபோல இணைய தளத்தை நடத்துபவர்கள் யார் என்று தெரிந்துகொள்ள http://whois.domaintools.com என்ற தளத்திற்கு செல்லலாம்.

மின்னஞ்சல்களை அனுப்புதல்

இணையத்தில் அதிகம் புகழடைந்துள்ள பயன்பாடுகளில் ஒன்று மின்னஞ்சல். ஒவ்வொரு நொடியும் லட்சக் கணக்கான மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. அவை எப்படி உரிய இடத்திற்கு போய்ச் சேருகின்றன. வழக்கமாக அஞ்சல் அனுப்பும்போது முகவரியுடன் அனுப்புவது போல மின்னஞ்சல்களும் முகவரியுடனே செல்கின்றன. அதாவது தமிழ் கம்ப்யூட்டருக்கு மின்னஞ்சல் அனுப்ப tamilcomputer@hotmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். இதில் @ என்ற குறியீட்டிற்கு முன்னர் உள்ள பகுதி பெறுநரை குறிக்கிறது. அந்த குறியீட்டிற்கு பின்னால் உள்ள பகுதி, மின்னஞ்சல் முகவரியை பராமரிக்கும் இணையதளம். மின்னஞ்சல் அனுப்பும்போது, அது முதலில் இணைய சேவை வழங்கும் நிறுவனத்தின் சர்வருக்கு (ISP’s email server) செல்லும். அதன் பின்னரே உரிய முகவரிக்கு செல்லும். இந்த பரிமாற்றத்திற்கு டொமைன் நேம் ரெஜிஸ்ட்ரி (Domain Name Registry) எனப்படும் டொமைன் பெயர் பதிவேடு உதவுகிறது.

பாக்கெட்டுகள் பற்றி தெரி்ந்து கொண்டால்தான் இணையத்தின் பின்னணியில் என்ன நடக்கிறது என்பது முழுமையாக புரிந்து கொள்ள முடியும். இணையத்தின் வழி எல்லா தகவல்களும் 0, 1 என்ற வடிவிலேயே பரிமாறப்படுகின்றன. இவ்வாறு ஒரு தகவலை அனுப்பும்போது அது பல துண்டுகளாக பிரித்து அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு துண்டும் பாக்கெட் எனப்படுகிறது. இந்த பாக்கெட்டுகள் வெவ்வேறு திசையி்ல் வெவ்வேறு கணினிகள் வழியாகக் கடத்தப்படும். ஏதாவது ஒரு (சர்வர்) கணினியில் கோளாறு ஏற்பட்டுள்ளது, அதனால் பாதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே இணையம் பேருந்துகளைப் போல பழுதாகி இயங்காமல் நின்றுவிடுதல் என்பதற்கு வாய்ப்பே இல்லை.

No comments:

Post a Comment